மழை வந்தாலும் பிரச்சினை, வராட்டாலும் பிரச்சினை: விவசாயிகள் புலம்பல்!

பருவ மழை குறிப்பிட்ட காங்களில் பெய்யாமல் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்திவிடும். தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டாலும் மீண்டும் விவசாயிகள் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர்.


இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களுக்கே அதிக மழைப்பொழிவை கொடுத்துள்ளது. அதிலும் வறட்சி மாவட்டங்கள் என அழைக்கப்படும் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்ககளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள ஏரி, கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

அதே சமயம் பல இடங்களில் கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறி வயல்களில் உள்ள பயிர்களை மூழ்கடித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, பாப்பாகுளம், தேராகுளம், கடாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. விளையும் தருவாயில் இருந்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் பாதிப்புகளை பார்வையிடக்கூட அரசு தரப்பில் யாரும் வரவில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.